Sunday 7 August 2016

யானும் புலவனோ!


திருச்சியில் உள்ள மலைக்கோட்டைக்கு உங்களில் பலரும் சென்றிருப்பீர்கள். அங்கே இருக்கும் உச்சிப்பிள்ளையாரை வணங்க மலைஉச்சியில் இருக்கும் கோயிலுக்கு ஏறிச்செல்லும் வழியில் தாயுமானவர் கோயில் இருக்கிறதல்லவா?  அந்தக் கோயிலுக்கு எழுநூற்று ஐம்பது வருடங்களுக்கு முன் பொய்யாமொழிப்புலவர் சென்றார். (அவர் காளியின் அருளால் கவிபாடும் திறம் பெற்றிருந்தார். அவர் ஒருமுறை குதிரை ஒன்றை ‘இறந்து போ’ [குதிரைமாளக் கொண்டு போ] எனக் காளியை வேண்டிப்பாட அக்குதிரை இறந்ததைக் கண்டோர் ‘பொய்யாமொழி’ என அவரை அழைத்தனர். அவர் சொன்ன சொல் பொய்யாகப் போகாத காரணத்தால் பொய்யாமொழியானார்).  

அவர் திருச்சி மலைக்கோட்டைத் தாயுமானவர் கோயில் காளியை வணங்கிப் பாடிய போது அங்கே வந்த அடியார் ஒருவர் தன்னையும் பாடும்படி புலவரைக் கேட்டார். அதற்குப் பொய்யாமொழிப்புலவர், கோழியாகிய காளியைப் பாடிய வாயால் குஞ்சிகளாகிய மனிதரைப் பாடுவனோ என்ற கருத்தில்
“கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவனோ” 
என்று மறுத்துக் கூறினார். 

பின்னர் மதுரை நோக்கி நடந்தார். நல்ல வெய்யிற்காலம். அந்த வெப்பத்தால் ஏற்பட்ட காட்டுத்தீயில் கள்ளி மரங்கள் கூட எரிந்து கொண்டிருந்தன. அவர் வேலமரங்கள் நிறைந்த காட்டு வழியே செல்லும் போது ஒரு முரட்டு வேட்டுவச் சிறுவன் ஒருவன் அவரை வழிமறித்து, இது எனது காடு, இவ்வழியாக நீ செல்ல முடியாதுஎனக் கூறி இடி இடித்தது போலச் சிரித்தான். வேட்டுவச் சிறுவன் நின்றிருந்த நிலையும் அவன் கண்ணில் தெரிந்த கொடுமையும் கையில் இருந்த வில்லும் அம்பும் அவர் நெஞ்சில் நிறைந்திருந்த காளியையும் ஒரு கணம் மறக்கச் செய்தன.

“நீயார்? புலவனோ? கவி புனைவாயோ?” என்றான். ‘ஆம்’ என்றார் புலவர். வேட்டுவச் சிறுவன் அக்காடே அதிரும்படி ‘என் மீது ஒரு பாட்டுப்பாடு’ என்றான். புலவர் ‘உன் பெயர் என்ன?’ என்று கேட்டார். வேட்டுவச்சிறுவன் சிரித்துக் கொண்டே என் பெயர் முட்டை என்றான். அதைக் கேட்ட பொய்யாமொழிப்புலவர்
“பொன்போலும் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே
என்பேதை செல்லற் கியைந்தனளோ - மின்போலு
மானவேல் முட்டைக்கு மாறாய தெவ்வர்போம்
கானவேல் முட்டைக்குங் காடு” 
                                                  - பொய்யாமொழிப்புலவர்
என்ற வெண்பாவைப் பாடினார்.

புலவரின் பாடலைக் கேட்டு, ‘இந்த வெண்பாவில் பொருள் குற்றம் உள்ளது’ என்றான் வேட்டுவச்சிறுவன். தொடர்ந்தும் 'பால் நிறைந்த கள்ளியே எரிந்து தீப்பொறி பறக்கும் கானகத்தில் வேலமர முட்கள் எரிந்து போகாது இருக்குமா? அது எப்படி எரிந்து போகாதிருந்து காலில் தைக்கும்? சிந்தித்துப் பாராது இதனை எப்படிப் பாடினீர் 'என்றான்? 'உன் மீது நான் பாடல் பாடுகிறேன்' என்று கூறி
“விழுந்ததுளி அந்தரத்தே வேமென்று வீழின்
எழுந்து சுடர்சுடுமென் றேங்கிச் - செழுங்கொண்டல்
பெய்யாத கானகத்திற் பெய்வளையும் சென்றனளே
பொய்யா மொழிப்பகைஞர் போல்”
                                                    - முருகப்பெருமான்
என்ற வெண்பாவைப் பாடியதோடு, ‘கோழியைப் பாடிய வாயால் குஞ்சைப் பாடேன் என்று சொன்னாய்! இப்போது முட்டையைப் பாடியது எப்படியோ?’ என்று நகைத்து ‘கோழியைவிட முட்டை பெரிதோ!’ என்றான். 

முன்னர் தாயுமானவர் கோயிலில் அடியார் உருவில் வந்தவனும் தனக்கு முன்னே வேட்டுவ வேடத்தில் நிற்பவனும் முருகன் என்பதை உணர்ந்து வணங்கினார் பொய்யாமொழிப் புலவர். அதனை தனது திருப்புகழில் அருணகிரிநாதரும்
“முற்றித்திரி வெற்றிக் குருபர 
          முற்பட்ட முரட்டுப் புலவனை
                    முட்டைப் பெயர் செப்பிக் 
                             கவிபெரு பெருமாளே”
                                                    - திருப்புகழ்
எனப் பாடியுள்ளார்.

காளி, முருகன் இருவரதும் அருளினைப் பெற்ற அந்தப் பொய்யாமொழிப் புலவரை ஒரு முறை சோழ அரசன் ஒருவன் “புலவரே!” என அழைத்தான். அதற்கு பொய்யாமொழியார் 
அறம் உரைத்தானும் புலவன் முப்பாலின்
திறம் உரைத்தானும் புலவன் - குறுமுனி
தானும் புலவன் தரணி பொறுக்குமோ
யானும் புலவன் எனின்”
                                                  - பொய்யாமொழிப்புலவர்
என்று சொன்னாராம்.  ‘அறத்தைச் சொல்லும் மகாபாரதத்தைப் பாடிய பெருந்தேவனாரும் புலவர். முப்பாலாகிய அறம், பொருள், இன்பம் மூன்றையும் சொன்ன திருவள்ளுவரும் புலவர். குறுமுனி என அழைக்கப்படும் அகத்தியரும் புலவர். அவர்களைப் புலவர்கள் என்று சொல்வது போல் என்னையும் புலவர் என்று சொன்னால் இந்த உலகம்[தரணி] தாங்குமா?’ என்று கேட்டாராம். அவர் சான்றோர் என்பதை அவரது அடக்கம் காட்டுகிறது. நம்மை நாமே புலவர் எனச்சொல்வதை எதில் அடக்கலாம்!
இனிதே, 
தமிழரசி.

1 comment: