Monday 1 April 2024

மயன் மகள் - 1.10(சரித்திரத் தொடர்கதை)


சென்றது ............

நாகநாட்டு அரசனான விசுவகர்மாவின் மகன் மயன்அவனின் மனைவி இளமதிஅவளை  அவன் காதலித்த காலத்தில் உலகநாடுகளை சுற்றிவரும் வழியில் அரசமாசுணத்தால்  தாக்கப்பட்ட அவனது நண்பன் முகிலனைக் காப்பாற்ற மலைவாசி போல சித்தன் என்ற  பெயருடன்  நாககடம் சென்றான்அறுவை மருத்துவத்தின் பின்னர் போடும் நுதிமயிர்த் துகில் குப்பாயம் தைக்க அவன் கறமன் கற்காட்டிற்குச் சென்ற நேரம்அவனின் காதலி  இளமதி நாககடத்து நாயகியாக சுக்கிராச்சாரியாருடன் மயில்பொறியில் வந்து நாககடத்து ஓவியபுரியில் கால்பதித்தாள். 

இனி.....


ஓவியபுரி 


தொன்மா இலங்கை கருவொடு பெயரிய

நன்மா இலங்கை மன்னர் உள்ளும்

மருவின்றி விளங்கிய வடு இல் வாய்வாள்

உருபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்

                                 - இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்[சிறுபாணாற்றுப்படை]


இந்த நானிலத்தில் வாழும் மனிதர்கள் இன்பமாக வாழ நாகர்கள் அள்ளி வழங்கிய ஈகம்   நாரீகமாகப் பேசப்படுவதற்கு சுக்கிராச்சாரியாருக்கும் பங்குண்டுஅளக்கர்களின் குருவாக இருந்து அவர் பலகலைகளையும் கற்பித்தார்ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனிப்பட்ட திறமைகளை இனங்கண்டு ஊக்குவித்தார். மாணவர்களின் கண்டுபிடிப்புகளை புறக்கணிப்பு செய்யாது செயல் முறைப்படுத்தி மற்றோர் முன்னிலையில் பாராட்டினார்அதனால் பெரிதும் போற்றப்பட்டார். 


அத்தகைய ஞானச்செல்வரின் அறிவுஆற்றல்அன்புபண்புபொறுமை சான்றாண்மை  யாவற்றையும் ஒரு சிறுபெண் குழந்தையின் மழலை கவர்ந்ததுஅந்தக் குழந்தையின்  பேச்சில் மழலை இருந்ததுஆனால் கருத்தில் அறிவையும் ஆற்றலையும் அவர் கண்டார்.  அத்தகைய குழந்தை கோடியில் ஒன்று பிறப்பதே கடினம் என்பதை உணர்ந்தார்அதன்  பின்னர் யாரைக் கண்டாலும் எதைப்பற்றிப் பேசினாலும் அக்குழந்தையைப் பற்றி அவர்  பேசாத நாளே இருக்கவில்லைநாக நாட்டு அரசனான விசுவகர்மாவிற்கும் அக்குழந்தை பற்றிச் சொன்னார்அந்தக்குழந்தை மேல் அவருக்கு அப்படியோர் ஈடுபாடு ஏற்பட்டது.  எனவே அவளைத் தன் தத்துப்பிள்ளையாகவே வரித்துக் கொண்டார்அவளின் அறிவும்  ஆற்றலும் நாகர்களுக்கு மட்டுமல்ல உலகிற்கே பல நன்மைகளைச் செய்யும் என்பதால் அவளை எந்தக் குறையும் இல்லாது காப்பது தன் கடமை என்று எண்ணிச் செயல்பட்டார். 


பிள்ளைகளைப் பெற்றவர்களைவிட வளர்த்தவர்களே அதிக அன்பு வைத்திருப்பார்கள்  என்பது அவரது செயல்களில் நன்றாகத் தெரிந்ததுஅவளது அறிவுக்கு மெருகூட்டி  வளர்த்துதமது எண்ணத்தில் வெற்றியும் கண்டுவிட்டார்ஒன்றா இரண்டா இருபது ஆண்டு  அவர் உழைத்த உழைப்பல்லவா இன்று கனிந்து பயன் தரப்போகிறதுசான்றாண்மை தந்த பெருமிதத்தின் தலைவாசலில் அவர் நிற்கிறார்தன் செல்லமகள் நாகநாட்டின்  பேரரசியாகிறாள் என்ற பெருமிதம் அவரைவிட்டால் வேறு யாருக்கு இருக்கமுடியும்அந்தப்பெருமிதக் களிப்பில் நாககடத்து ஓவியபுரியின் வானவூர்தி ஓடுபாதையில் மயில்பொறியில் வந்து இறங்கினார்.


அவர் மதங்கபுரி போகமுன் நாகநாட்டின் வருங்கால பேரரசிக்கு வரவேற்பளிக்கச் செய்து சென்ற ஏற்பாடுகள் யாவும் நடைபெறவில்லை என்பதை அப்போது உணர்ந்தார்இளநகை எங்கேஅவள் விளையாட்டுப் பிள்ளை இல்லையேபொறுப்பு மிக்கவள்  அல்லவாஅவளுக்கு ஏதேனும் நடந்ததோஎன ஒரு கணம் எண்ணினார்அவள்  வரவில்லை என்றாலும் வாலகன் எங்கேஅது எங்கே போயிற்றுஇளமதியின் மணத்தை நுகர்ந்தால் எங்கிருந்தாலும் பிளிரியபடி ஓடி வருமேஎன வாலகனைத் தேடி அவர் கண்கள் இங்கும் அங்கும் சுழன்று இசைபாடின. 


இளமதி சிறுமியாக அவரிடம் குருகுலவாசம் செய்து படிக்க வந்த காலத்தில் இரதியும்   மன்மதனும் ஒரு வெள்ளையானைக் கன்றை அவருக்குக் காணிக்கையாகக் கொடுத்தனர்அப்போது அது இரண்டு மாதக் கன்றாக இருந்ததுமற்றைய யானைக் கன்றுகள் போல்  இல்லாது வெள்ளை நிறமாக இருந்ததால் சிறுமியாக இருந்த இளமதி அதற்கு வாலகன்  என்று பெயரிட்டாள். 


ஏன் அதற்கு வாலகன் எனப்பெயரிட்டாய்?’ என இரதி கேட்டாள். 


நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே எனக்கு வெள்ளை மனது’ என்றுஎன்மனம் போல் அதுவும்வெள்ளையாக இருக்கிறதுவால் என்றால் வெள்ளைஅகம் என்றால் மனம். எனது மனம் போல் அதுவும் வெள்ளைஆண்யானைக் கன்றாதலால் ‘வாலகன்’ எனப்பெயர் இட்டேன்'  என்று பெரிய விளக்கம் கொடுத்தாள். 


அந்த விளக்கத்தைக் கேட்ட இரதிமன்மதன்சுக்கிராச்சாரியார் உரகவதி அறிவுத்திறத்தைகண்டு சிரித்து மகிழ்ந்தனர்அன்றிலிருந்து வாலகன் அவளது தோழனாகவே மாறியதுகுருகுல வாசம் முடிந்து வீட்டுக்குச் சென்று மூன்று வருடத்திற்கு பின் வருகிறாள் என்றாலும்வாலகன் அவளை மறக்குமாஎன்ன?


நாககடமக்கள் இளமதியை 

நாககடத்து நாயகியேநானிலம் காப்பாய் நீயினியே!” 

என வாழ்த்தும் போதுவாலகன் அவளின் கழுத்தில் மாலை இட்டு வரவேற்றுஅவளை மஞ்சுமேல் வைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்இளமதிக்குப் போடவேண்டிய மாலையை அவரின் செயலாளர் மனைவியே ஏந்தி நின்றாள். 


தான் நினைத்ததை முடிப்பதிலும்புதுமைகள் செய்வதிலும் திறமைமிக்க இளநகை தனது ஏற்பாட்டில் ஏதாவது புதுமை செய்து தனக்கும் இளமதிக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்க 

இருக்கின்றாளோ என சுக்கிராச்சாரியார் நினைத்தார். 


சுக்கிராச்சாரியாரது மனட்டத்தை அறியாத இளமதிநாககடமக்களின் வாழ்த்து மழையில்மூழ்கி மெய்சிலிர்த்து நின்றாள்அவள் என்றுமே தன்னைப் பெரியவளாக நினைத்ததில்லை.முன்பு எத்தனை முறை இந்த நாககடத்திற்கு வந்திருக்கிறாள்அவள் அன்றும் இன்றும் எதுவித மாறுதலையும் தன்னில் கண்டதில்லைஎன்றுமே இல்லாது இன்று நாககடமே விழாக் கோலம் தாங்கி நிற்பதுஓவியபுரியின் ஓடுபாதையில் நின்றுபார்க்க நன்றாகவே தெரிந்தது.அது எதற்காகதான் நாககடத்து நாயகி ஆகியதற்காகவா? அன்றேல் நாகநாட்டின்  பேரரசியாகப் போவதற்காநாககடமக்களின் வாழ்த்தே அவளுக்கு பதிலைச் சொன்னது. 


இரண்டிற்கும் சேர்த்தே அவர்கள் வாழ்த்துகிறார்கள்அந்த வாழ்த்தைப் பெற அவள் தகுதிஆனவள் தானாசின்னஞ்சிறு குருவியின் தலையில் உலகத்தையே தூக்கிவைத்தது போல்உணர்ந்தாள்அரச வாழ்க்கையின் கட்டுப்பாடுகள்இன்பங்கள் யாவற்றையும் அவள்  வெறுத்தாள்அங்கே உண்மையான அன்பைக் காணமுடியாதுஉலகிற்காக போலியாக  நடித்து வாழவேண்டும் என்பதே அவளின் முடிவு. 


அவளும் அரசகுடும்பத்தைச் சேர்ந்தவளேஅரசவாழ்வை விட உலக உயிர்களுக்காக  இயற்கையோடு இயைந்து வாழ விரும்பினாள்தன் எண்ணத்தை சுக்கிராச்சாரியாருக்கும் சொன்னாள்அவர் ‘உன் உலகநேயம் உயிர் பெறவேண்டுமானால் நீ நாகநாட்டின் பேரரசி ஆகத்தான் வேண்டும்’ என்றார். 


மயனைக் காதலித்தது என்னவோ உண்மைதான்அவன் தன்னிடம் எதுவும் சொல்லாமல்  திடீரேன ஓர்நாள்  நாகநாட்டை விட்டுச்சென்றான்அந்த ஆழ்மனவடு நீங்காது நெஞ்சில்  பசுமையாக  இருக்கிறதுஇரண்டு வருடங்களாக அவள் நலமாக இருக்கிறாளா? என்பதை அறியாத மயன் மேல் வெறுப்பே மிஞ்சி நின்றதுஅதனால் மயனை மறக்கக் கற்றுவிட்டாள். 


தான் உயிர் சுமந்து வாழ்வதே உலக நலன் காப்பதற்கே என்றெண்ணி அதற்காகத் தன்னை ஈடுபடுத்தி இருந்தாள்கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இரதியும் மன்மதனும் அவளை  அழைத்து விசுவகர்மாவின் முடிவைச் சொன்ன போது நிலைகுலைந்து போனாள்தாயற்ற தன்னை தாய்க்குத் தாயாக வளர்த்த இரதியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டே விசுவகர்மா  'நாககடத்து நாயகி' என்ற பெயரில் நாகநாட்டின் இளவரசி ஆக்கியதை ஏற்றாள். தான்   எடுப்பார் கைப்பாவையா?’ எனப்பலமுறை நினைத்துப் பார்த்தாள். 


அந்த மன அழுத்தத்தில் இருந்தவளுக்கு நாககடத்து மக்களின் வாழ்த்தொலி அவளின்  கடமையை உணர்த்தியதுவாழ்த்துக் கூறும் மக்களைப் பார்த்து இருகை குவித்து வணங்கிதலைதாழ்த்திப் புன்னகைத்தாள்.  


மங்கல முரசொலிக்க அவளுக்கு மலர்மாலை சூடிஆலத்தி எடுத்து வரவேற்றார்கள். 

நாகநாடே தலைவணங்கும் குருவான சுக்கிராச்சாரியார் முன்பு பிறர் அவளை வாழ்த்துவது அவளுக்கு கூச்சமாக இருந்ததுஎனவே சுக்கிராச்சாரியாருடன் சென்று ஒட்டிக்கொண்டு நின்றாள். 


அவரும் சிரித்தபடி ‘நீ நாகநாட்டின் பேரரசியாகப் போகிறாய்உன்னைக்காணத் திரண்டு நிற்கும் மக்களுக்கு மகிழ்வுடன் வாழ்த்துக் கூறவேண்டியவள் நீயே!’ என்றார்.


ஓவியபுரி என்ற பெயருக்கு ஏற்ப ஊரின் மலைகளும்மலைகளிலிருந்து வீழும் அருவிகளும்மரஞ் செடி கொடிகளும்பறவைகளும்விலங்குகளும் இயற்கையின் கைவண்ணத்தில்  அழியா ஓவியமாகத்  தெரிந்ததுஓவியபுரியின் இயற்கையின் வண்ணம் அவளை மீண்டும்  குழந்தையாக்கி குதூகலிக்க வைத்ததுஅவளின் துள்ளலைக்கண்ட சுக்கிராச்சாரியாரும் இளநகையையும் வாலகனையும் மறந்தார்கடந்த மூன்று வருடத்தில் ஓவியபுரியில்  உண்டான மாற்றங்களை அவள் சொல்லச்சொல்ல அவரும் சிறுகுழந்தை போல் கேட்டுக்கொண்டு வந்தார். 


நாககடம் ஒரே ஆடலும் பாடலுமாக இசை வெள்ளத்தில் மூழ்கிக் களித்ததுஇருவரும்  இன்பம் பொங்க நாககடத்து மக்களின் ஆடலையும் பாடலையும் நின்று நின்று பார்த்துக் கேட்டு இரசித்தபடி அவர்களின் வாழ்த்தையும் வரிசையையும் பெற்றுக்கொண்டுசுக்கிராச்சாரியாரின் தேரில் வந்தனர்.


சிற்றாற்றங்கரைக்குச் சென்று திரும்பும் இளநகையின் தேரின் குதிரைகள் விரைவாக ஓடி வந்தனதான் போட்ட முடிச்சுகளில் இருந்து சித்தன் யார் எனும் விடையைக் காணமுடியாத இளநகையின் சிந்தனை தேரின் வேகத்தால் தடைப்பட்டது. 


"வீரா!மலைப்பாங்கான இடத்தில் ஏன் இவ்வளவு வேகமாகத் தேரைச் செலுத்துகிறாய்” என்றாள் இளநகை"


இரதிதேவி அம்மாவின் குழந்தை இன்றைக்கு வாராங்கலாமே?’ என்றவன்தொடர்ந்து   அந்தக் குழந்தேசின்னக்குழந்தையாய் இந்தத்தேரில என்னோட தானே வரும்இப்ப நம்ம நாட்டுக்கே அரசியாவப் போகுதாமேஅதப்பாக்க என்னப்போல இந்தக் குதிரைகளுக்கும் ஆசை வந்திடிச்சி’ என்றான்.


வீரனின் கதையைக் கேட்டு சிரித்தபடி, ‘அப்ப எனக்கு ஆசை இல்லையா?’ என்றாள்.


நீங்க தானே காலையில் இருந்து ஏதோ சிந்தனையில் இருக்கிறீங்கஅந்த சித்தன் வந்த, நேரத்தில இருந்து உங்க போக்கே மாறிப்போச்சு’ என்றான்.


இருவர் பேச்சையும் கேட்டுச் சிரித்த அவளின் மெய்க்காவலன் ‘அங்க பாருங்க’ என்று கூறிஓவியபுரியின் திசையில் காட்டினான். 


அவன் காட்டிய திசையில் தெரிந்த ஆரவாரமும்வானளாவ உயர்ந்தோங்கிய கொடிகளின்  அசைவும் நாககடத்து நாயகி வந்துவிட்டாள் என்ற செய்தியைச் சொல்லியதுஅவர்களின்  மனவேகம் போலத் தேரும் ஓடிச்சென்று சுக்கிராச்சாரியாரின் மாளிகையின் முன் நின்றது. 


இளநகை தேரில் இருந்து இறங்கினாள்நாககடத்து மக்கள் சிலர் அவளை இளமதியாக  நினைத்து வாழ்த்துக் கூறினர்வீரன் நுதிமயிர்த்துகிலை எடுத்துவர அவள் மெய்க்காவலன் உடன்வர மாளிகையினுள் சென்றாள்மேலே நிலாமுற்றத்தில் நின்று இளமதியின் ஊர்வலம் வருவதைப் பார்த்த உரகவதிக்கு இளநகையைக் கண்டதும் போன உயிர் திரும்ப வந்தது. 


உரகவதி கூடத்திற்கு வரமுன்முகிலனைக்கூடத்தில் காணது தேடிய இளநகைஅவன்  வேறுஅறைக்கு மாற்றப்பட்டதை அறிந்து அங்கு சென்றாள். மருத்துவரிடம் வீரன் கொணர்ந்து கொடுத்த நுதிமயிர்த் துகிலைக் கொடுத்து, முகிலனின் நிலை எப்படி  என்பதையும் கேட்டு அறிந்தாள்


அவரோ அவளை விடுவதாக இல்லைநுதிமயிர்த் துகிலை வைத்து நான் என்ன செய்வதுகுப்பாயம் அல்லவா வேண்டும்?”  என்று கோபத்துடன் சொன்னார்.


நுதிமயிர்க்குப்பாயம் தைத்துஎடுத்து வரும்வரை நுதிமயிர்த் துகிலைப் பயன்படுத்துங்கள்” என்றாள்.


மருத்துவரும் எரிச்சலுடன் “வாயாடியாய் இருந்தால் மட்டும் போதாது கொஞ்சம் உலக ஞானம் வேண்டும்” என்றார்.


நுதிமயிர்க் குப்பாயத்திற்கும் உலகஞானத்திற்கும் என்ன தொடர்பு?” என்றாள் அவள்.


நுதிமயிர்க்குப்பாயம் வெளியே உள்ள காற்று உள்ளேபுகாது குறித்த வெப்பநிலையில்  உடலை  வைத்திருக்கும்அதற்கென்று கட்டப்பட்டிருக்கும் ‘கடறு மையத்தில்’ நுதிமயிர்க்குப்பாயம்தைப்பதற்கு என்றே ஆராய்ந்து படித்தவர்கள் வேலைசெய்கிறார்கள்வெளிக் காற்று உள்ளேபுகாது நுதிமயிர்க்குப்பாயம் செய்யப்படுவதால் வெளிக்கிருமிகள் காயத்துள் சென்று தாக்காது காக்கப்படுகிறதுநுதிமயிர்த் துகிலால் ஆளை மூடிக் கட்டினாலும் காற்று உள்ளே போகாமல் இருக்குமாஒவ்வொரு நுதிமயிர்க் குப்பாயத்திற்கும் நாகநாட்டரசு எவ்வளவு பொருளைச் செலவு செய்கிறது என்பதாவது தெரியுமா?” என அவர் கேட்டார்.


 இவ்வளவு விடயங்கள் இருக்கிறதா?” எனக்கேட்டவள்இதனால் சித்தன் நுதிமயிர்த் துகிலை எடுத்துக்கொண்டுகாற்றாகப் பறந்தானோஎன நினைத்தாள்.


அவள் சித்தனை நினைப்பதை அறிந்தவர் போல் “உன்னுடன் வந்த சித்தன் எங்கே?” எனக் கேட்டார்.


சித்தன் குப்பாயம் தைக்க கறமன் கற்காட்டுக்குப் போனான்” என்றாள்.


அது கறமன் கற்காடு அல்ல, அந்த இடம் ‘கறமன் கடறு’ என்றார்.


சித்தன்நுதிமயிர் குப்பாயம் தைக்கும் இடம் கறமன் கற்காடு என்று சொன்னானே!” என்று இளநகை சொன்னாள்.


பார்த்தாயாசித்தனுக்குக்கூட உனக்கு மொழி தெரியாது என்பது தெரிந்திருக்குஉனக்குபுரியட்டும் என்று கற்காடு என்று சொல்லி இருப்பான்அது கல்லுக் காடுதான்கற்காடு என பண்டைய மரங்கள் கல்லாய் மாறி நிற்கும் இடங்களைச் சொல்வர். கடறு என்று வானுற ஓங்கி கல்லுகளே காடு போல் நிற்கும் இடங்களை அழைப்பர். அந்தக் கடறுகளின்  உச்சிக் கொம்பரில் வெள்ளை வெளேரென பலர் உனை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்நேரம் இருக்கும் போது ஒரு நாள் கடறுப் பக்கம் போய்ப் பார்” எனக்கூறிச் சிரித்தார்.


என்னை எதிர்பார்த்தாஅவளுக்கு அவர் என்ன கூறுகிறார் என்பது புரியவில்லைஇப்போ உங்களுடன்  வெட்டிப்பேச்சுப் பேச நேரம்மில்லைமுகிலனைப் பார்துக்கொள்ளுங்கள்.  சித்தன் குப்பாயத்துடன் வருவான்” என்றாள்.


அதுசரிகறமன் கடறுக்கு சித்தன் எப்படிப் போனான்?” 


சித்தன் போகவில்லைவாலகன் அவனை தூக்கி மஞ்சுமேல் வைத்துக்கொண்டு ஓடியது” என்றாள்.


இளநகை!” எனக் கூப்பிட்டுக்கொண்டு அங்கே வந்த உரகவதிஅவர்கள் பேசுவதைக்   கேட்டுகவலையுடன் “வாலகன் சித்தனைக் கொண்டு ஓடிப்போயிற்றாஎங்கே போகும்ஒருவேளை ஓவியபுரி போயிருக்குமோ!” என்றாள்.


நத்தன் ஓவியபுரி போனானே” என்றார் மருத்துவர்.


என்ன சொன்னீர்கள்நத்தனாசித்தனுடன் வந்த நத்தனாஎன்று சொன்னதையே   மீண்டும் மீண்டும் சொன்ன இளநகை நத்தன்நத்தன்நத்தத்தன்” என்றாள்.


அவராஅவன்!” என்றாள் வியப்போடுஅவள் கண்கள் மகிழ்ச்சியில் மிளிர்ந்தன.


மிளிரும்....


இனிதே,

தமிழரசி.


சொல், சொற்றொடர் விளக்கம்:

"தொன்மா இலங்கை கருவொடு பெயரிய

நன்மா இலங்கை மன்னர் உள்ளும்

மருவின்றி விளங்கிய வடு இல் வாய்வாள்

உருபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்”  - தொன்மையான பெரிய இலங்கையை கருவில் இருக்கும் பொழுதே பெற்றவனும் அந்த நல்ல பெரிய இலங்கையை ஆண்ட மன்னர்கள் பலருள்ளும் எதுவித குறையில்லாதவனும் பழியில்லாததும் குறிதப்பாத வாளை உடையவனும் புலி போன்ற மிகுந்த வலிமையுடைய ஓவியர் குடியில் பிறந்த பெருமைக்கு உரியவன்.

தொல்மா இலங்கை - தொன்மையான பெரிய இலங்கை

கருவொடு - கருவில் இருக்கும் போது

பெயரிய - பெற்ற

நன்மா இலங்கை - நல்ல பெரிய இலங்கை

மறுஇன்றி - குறையின்றி

வடுஇல் - குற்றமில்லாத

வாய்வாள் - குறிதப்பாத வாள்

உறுப்புலி துப்பின் - புலி போன்ற வலிமையுடைய 

ஓவியர் பெருமகன் - ஓவியர் குடியில் பிறந்த பெருமைக்கு உரியவன்.

நாகர்கள் - தமிழர்கள் [பரிபாடல் மதுரையை நாகநாடு என்கிறது]

வழங்கிய ஈகம் - கொடுத்த கொடை

நாகர் + ஈகம் - நாகரீகம்/நாகரிகம்

அளக்கர் - கடலால் சூழப்பட்ட தீவுகளில் வாழ்வோர்

புறக்கணித்தல் - அலட்சியம்

வரித்து - தேர்ந்தெடுத்து

குருகுலவாசம் - குருவின் வீட்டில் தங்கி இருந்து படித்தல்

இரதி - மன்மதனின் மனைவி, இலங்கையிலுள்ள மாந்தை அரசகுடும்பத்தைச் சேர்ந்தவள்

மன்மதன் - காதல் கடவுள்

வெள்ளையானை - கிழக்கு ஆசியாப்பகுதியில் அந்நாளில் வாழ்ந்த யானை இனம்

குதூகலிப்பு - பெருமகிழ்ச்சி

வரிசையையும் - பரிசுகளையும்

உச்சிக்கொம்பரில் - மேல் நுனியிலுள்ள கொம்பு போன்ற கூரான இடத்தில்